என் வீட்டில் அவள் – ஒரு சிறுகதை

​அன்று காலை மணி 7 இருக்கும். எழுந்ததும் அம்மாவின் கட்டளைக்கேற்ப, வாசலைப் பெருக்கி, பாலை அடுப்பில் வைத்து, சிறிது ரஹ்மான் இசையில் மிதப்போம் என தொலைக்காட்சியை வைத்து நல்ல பாடல் ஒலிக்கும் channelஐ தேடினேன்.

” ஹோசன்னா, வாழ்வுக்கும் பக்கம் வந்தேன், ஹோசன்னா சாவுக்கும் பக்கம் நின்றேன்” என கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததைப் போல், ரஹ்மான் பாடிக்கொண்டிருக்க, இசையின் மாயாஜாலம் துவங்கியது. என் காதலியை நினைத்து என்னை அறியாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.

எங்கள் குடும்பநண்பர் ஒருவரின் மகள், மைதிலி தான் என் காதலி.அவளும் என்னை காதலிக்கிறாள் என்பது எனக்கு தெரிந்தும் என் காதலைக் கூறாமல் இருந்தேன். பைத்தியக்காரன் நான்..

அவள் நினைப்பில் நான் இருக்க பாழாய்ப்போன அடுப்பில் பால் பொங்கி மேடை முழுவதிலும் படர்ந்துவிட்டது..

அட இப்போ இத வேற சுத்தம்செய்யணுமா என்று புலம்பிக்கொண்டு, சுத்தம் செய்வதைத் துவங்கினேன். திடீரென யாரோ கதவைத் தட்டியது போல் இருந்தது. சென்று பார்த்தால் வீட்டிற்கு வீடு சென்று செய்தித்தாள்ப் போடும் சிறுவன் அது. செய்தித்தாளைப் படித்துக்கொண்டே வீட்டிற்குள் செல்ல, திடீரென மறுபடியும் கதவு தட்டும் சத்தம்.
திரும்பிப்பார்தேன்..திக் என்று போனது. ஆம், என் வீட்டில் அவள். யாரா? அட மைதிலி. புதிய வீட்டிற்குக் குடிமாறியதும் எவ்வளவு முறை கூப்பிட்டாலும் ஏதோ முக்கிய வேலை இருக்கு என்று கூறி சமாளிப்பாள். அட, நான் முன்பு இருந்த வீட்டிலும் பல வருடங்கள் முன்பு ஒரு முறை வந்தாள் அவ்வளவு தான்.

திடீரென அவளைப் பார்த்ததும், Dhoni அடிக்கும் helicopter shot போல் இருந்தது. என்றோ ஒரு நாள் வரும் என்று தெரியும் ஆனால் இன்று வரும் என்று நினைகவில்லையே மகனே. சிவப்பு நிற புடவை அணிந்து ஒரு கையை வாசல் தூணில் வைத்தபடி , கிண்டலான பார்வையுடன் நின்றுகொண்டிருந்தாள், என் மைதிலி.

” என்ன அப்டி பாக்குற, வீட்டுக்கு வந்தவங்கள உள்ள கூப்பிடமாட்டியா?”

” ச்ச அப்டி லாம் இல்ல, உள்ள வா. சொல்லாம டப்புன்னு வண்டியா அதான்…”

” ஓஹோ, சொல்லிட்டு வரணுமா? அவளோ தூரமாய்ட்டேனா?”

” ஏய் என்ன நீ எடக்கு மடக்கா பேசிட்டு…” என்று கூறி 32 பற்களையும் காட்டி சிரித்து, நெழிந்திக்கொண்டிருந்தேன்.

” வா மைதிலி இந்த வீட்டுக்கு இப்ப தான் முதல் வாட்டி வரே, இல்ல? வீட்டை சுத்தி காட்றேன்” என கூறி ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்றேன். அம்மா அப்பா உறங்கும் அறை தவிர. தூக்கத்தைக் கெடுக்க வேண்டாமேன்னு.
முதல் அறைக்குச் சென்றிருக்கும்பொழுது, இந்த சொர்க நிகழ்வை ஏதோ தடுத்தது. ” அப்டி இப்படி அப்படி இப்படி, ஆஹான். அப்படி இப்படி அப்படி இப்படி” என்று ஏதோ பாடல் தொலைக்காட்சியில்த் துவாங்கிக்கொண்டிருந்தது. ‘பிட்டு படம் டீ’ பாடல் அது. அவள் அறையின் உள்ளே செல்ல, hall-லிற்கு ஓடி சென்று ” விடியற்காலை போடுற பாட்டாடா இது” என்று மனதில் திட்டிக்கொண்டே, remote-ஐ எடுத்து வேறொரு channel வைத்தேன்.

பின், என் அறையை காட்டினேன். என் அறையிலிருந்து வெளியே வரும் போது, என் அறையின் ஓரத்தில் இருந்த நாற்காலியின் கால் என் கால் சுண்டுவிரலில் இடித்து, நான் விழ இருந்தேன். 1000 தடவைக்குமேல் அவ்வழியே சென்றிருப்பேன் , ஆனால் அவள் வந்த நாள் தான் எனக்கு இது ஆகவேண்டுமா . அந்த நொடி ஏதோ slow motion-இல் விழுவது போல் இருந்தது. அந்த நொடியில் என் மனநிலையை மானிட உலகத்திற்கு சொல்ல என்னால் முடியுமோ?

“நிஜமாவா? என் வீட்லயா? என் room-லயா? என் மைதிலியா? ” என்று ஒரு புறம் மனம் நினைக்க, “விழுந்துட்டு இருக்கோமே, என்ன வந்து பிடிப்பாளா? அவ கை விரல் படும், இல்ல? பிடிக்கலைன்னாலும் விழுந்தா என்ன தூக்கும்போது அவ கை பிடிக்கலாம், இல்ல ?” என்று என் மூளை சொல்ல , இதனை நினைத்தும், நானே அருகில் இருந்த சுவரின் உதவியுடன் விழுவதிலிருந்துக் காப்பற்றிக்கொண்டேன். ச்ச. காப்பாற்றவில்லை, நானே என் ஆசைக்கு குழி தோண்டிவிட்டேன்.

” ஐயோ பாத்து நடடா” என்று அவள் கூறியது, Participatory certificate போல் இருந்தது.

வாசலில் ஏதோ சத்தம் எனக்கு கேட்க, சென்று பார்த்தேன். பூ விற்கும் அம்மா அது. பூவை வாங்கிவிட்டு, fridgeஇல் வைத்த பின்பு எங்கள் சுற்றுலாவில் மீண்டும் இணைந்தேன். நன்றாக வீட்டை சுத்தி பார்த்ததும், அவள் புறப்பட இருந்தாள். “ஏதாச்சும் பேசி , இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வைப்போமா?” என்று நினைத்துக்கொண்டிருக்க, திடீரென்று,

” நான் வரப்போற வீடு. நல்லா பாத்துகோங்க” என்று கூறி திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

தூக்கிவாரிப்போட்டது.

” ஏய் மைதிலி!!! நில்லு!! என்ன சொன்ன?” என்று கேட்டேன்.

” ஓ உங்க அம்மா சொல்லலயா? பேசிட்டாங்க. நானும் ஒகேனு சொல்லுட்டேன்” என்று கூறி கண்ணடித்து சென்றுவிட்டாள்.

இன்று எங்களுக்கு திருமணம் ஆகி 6 மாதம் ஆகியுள்ளது. “லட்சுமி வந்ததும் வீடு பாருடா எப்டி மாறிடுச்சு ” என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். லட்சுமியா? அதெல்லாம்

தெரியாது. மைதிலி என்னருகில், என் வீட்டில் இருக்கிறாள். அது தான் அவசியம்.
நான் தனியாக இருந்த என் அறையில், என் தேவதை இருக்கிறாள்.. coffee யின் சூடும் ருசியும் அதிகரித்துள்ளது, அவள் ரசத்தில் போடும் உப்பை போல. எனக்குப் பிடித்தவை இன்று அவளுக்கும் பிடித்துள்ளது. அவளுக்குப் பிடிக்காதது எனக்கும் பிடிக்கவில்லை. என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் கண்ணாடி, அவள் முகத்தையும் சேர்த்துப் பார்க்கிறது. தூங்கும்போது அவள் மூச்சுக்காற்றில் நான் அடைக்கலம் பெறுகிறேன்.

ஆனால் இன்றும் அடிக்கடி நான் என்னை கேட்டுக்கொள்வேன். ” என் வீட்டில் அவளா? அவள் என் வீட்டிலா? அட. ஆமா டா.. என் வீட்டில் அவள்.

Scroll to Top