நான் கவிஞன் – ஒரு சிறுகதை

காலங்கள் மாறினாலும் , என்றும் நினைவில் இருக்கும் ஒரு நாள் அது.அந்த நாள்….
காலை சுமார் 4 மணி இருக்கும். துள்ளி குதித்து எழுந்தேன். மனதில் உற்சாகம் பொங்க அன்று இரவு என் கனவில் வந்த ஒரு சிந்தனையை வைத்து என் கவிதையின் அடுத்தடுத்த இருவரிகளை எழுதினேன். ஆனால் அந்தக் கவிதையின் இறுதி வரிகளை என்னால் எழுத முடியவில்லை.

ஏதோ ஒரு வார்த்தையை தேடிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து, என் கடிகாரம் ஒலிக்க, அதை அணைத்து, முடியாத என் கவிதையை நினைத்துக்கொண்டே என் வீட்டிற்கு வெளியே சென்றேன்.
பரந்த நிலப்பரப்பும், புதியதோர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த பறவைகளும் என் கண் முன்னே ஜொலிக்க, அவற்றை ரசித்துக்கொண்டே, ஒளிந்துகொண்டிருக்கும் என் வரிகளைத் தேடினேன். எதுவும் தோணவில்லை.
சிறிது நேரம் கழித்து என் வீட்டுக்கு மறுபடி சென்றேன். பல்விளக்கிக்கொண்டிருந்த போது ” ச்சல் ச்சல்” என இரண்டு முறை ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால், உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டிருந்த என் அம்மாவின் கால்களில் இருந்த கொலுசின் சத்தம் அது. அம்மாவின் கொலுசைப் பற்றி எத்தனையோ கவிதைகள் இருந்தும், அன்று என்னவாயிற்றோ எனக்கு, புயல் வேகத்தில் செல்லும் தொடரியைப் போல், வார்த்தைகள் அடுக்கடுக்காய் என்னுள் பாய என் கவிதையை முடித்தேன்… மனம் நிறைந்தது. வெளியே சென்று ஒரு ஆட்டம் போடலாம் போல் தோன்றியது.

குளித்து, உண்டு, அன்று 9 மணிக்கு துவங்க இருந்த கவிதை போட்டிக்குச் செல்லத் தயாரானேன். என் தெருவின் ஓரத்தில், மோகன், என்னை அழைத்துச் செல்ல கால் தள்ளு வண்டியில் காத்திருந்தான். என் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டு, ” என்ன மச்சான் என்ன ஆச்சு?” என்று கேட்டான். “இன்னைக்கு போட்டில நான் தான் டா ஜெய்பேன். பாக்கறியா?” என்று நான் கூற, புறப்பட ஆரம்பித்தோம். போகும் பாதையில் அழகாய் என்னுடன் பயணித்துக்கொண்டிருந்த இயற்கையை ரசித்துக்கொண்டே போட்டி நடக்க இருந்த இடத்தைச் சென்றடைந்தோம்.

ஒவ்வொருவராக மேடை ஏறி, கவிதைகளை வாசிக்க கைதட்டல்கள் ஒலித்தபடி இருந்தன. ஏனோ தெரியாத பதற்றம் என் மனதில் வந்தது. ஆனால் அது மேடைப்பேச்சாளர்களுக்குப் பொதுவாக ஏற்படும் பதற்றம் போல் இல்லை. அது வார்த்தைகளில் கூறமுடியாத ஒரு புது உணர்வாய் இருந்தது.
அடுத்து வர இருப்பவரைப் பற்றி தொகுப்பாளர் கூறி முடிப்பதற்குள்ளே , அறை கைதட்டல்களிலும் , விசில் சத்தத்திலும் அதிர்ந்தது. ஏதோ பெரிய ஒரு கவிஞன் என்பதை புரிந்துக்கொண்டேன். அவன் பெயர் ‘ராகுல்’ என்பதை கைதட்டும் ஓசையின் நடுவே யாரோ கூறியதைக் கேட்டேன். ராகுலின் கவிதை பதற்றத்தில் இருந்த என்னையும் கரையச்செய்தது. கண்டிப்பாக முதல் இடம் அவனுக்குத் தான் என்பதை புரிந்து கொண்டேன்.

” அடுத்து, 15 முறை பள்ளி அளவில் நடைபெற்ற கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற, ரூபேஷ் ” என்று தொகுப்பாளர் கூற மேடைக்கு ஏறிச்சென்றேன். அந்த மேடைக்கு ஏறிச்செல்வது ஏதோ பெண் பார்க்க பெண் வீட்டிற்கு செல்வதைப் போன்று இருந்தது. அங்கு மேடையின் நடுவே சென்று நின்று, அந்த அறையை ஒரு நொடி கவனித்தேன். சுமார் 3000 பார்வையாளர்களின் கண்கள் என் மேல் இருந்தன.
பல ஆண்டுகள் கழித்து கலந்துகொண்ட போட்டி அது. அது வரை என் கவிதைகளை என் வீட்டில் உள்ளவர்கள் கூட கேட்கமாட்டார்கள்.நேரம் இருக்காது. மோகன் ஒருவனே என் வரிகளைக் கேட்பான். ஆனால் அன்று 3000 பேர் கேட்பார்கள் என்பதை உணர்ந்து என் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது என்பதை உணர்ந்தேன்.

கவிதையை வாசித்து முடித்தேன். முடித்தவுடன் 2 வினாடிகளுக்கு உறைந்து போயிருந்தது அந்த அரங்கம். 2 விநாடிக்குப் பிறகு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டினர். அந்த காட்சியைக் கண்டு உறைந்துபோனேன். பார்வையாளர்களின் நடுவே அமர்ந்துகொண்டிருந்த மோகனின் கண்களில் கண்ணீர் வர, என் கண்களிலும் கண்ணீர் வர ஆரம்பித்தது. மெதுவாக கீழே நடந்து வந்து அமைதியாக அமர்ந்தேன்.

இறுதியில் ஜெயித்தது ராகுல். என் கவிதையில் சிறு சிறு இலக்கணத்தவறுகள் இருந்ததால் எனக்கு இரண்டாவது இடத்தை அளித்தனர் நடுவர்கள். போட்டி முடிந்ததும் ராகுல் என்னிடம் வந்து என் கவிதைத்திறனைப் பாராட்டி பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது. இரண்டாவது இடம் பெற்றதைக் கொண்டாட நானும் மோகனும் அருகில் இருந்த கண்காட்சிக்குச் சென்று நேரத்தைச் செலவிட்டு மாலை வரை மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தோம். களைப்பான தினத்திற்கு பிறகு வீடு திரும்ப, என் அப்பா கோபத்துடன் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து என் முகத்தில் இருந்த சந்தோசம் ஒரு நொடிக்குள் காணமல்போனது.
ஏன் தாமதம் என்று என்னைக் கேட்டு, வீட்டிற்குள் அழைத்தார் அப்பா. அன்று நடந்த நிகழ்வுகளை என் அம்மாவிடம் கூறிக்கொண்டே இரவு உணவு உண்டேன்.

உணவு உண்டதும் என் மனதில் உருவான இன்னொரு கவிதையை எழுதத் துவங்கினேன்..அப்பொழுது திடீரென என்
அப்பா என் அருகில் அமர்ந்து, ” நான் கூறுவதை கவனமாக கேளு” என்று கூறி ஏதோ சொல்லத் துவங்கினார்.

எங்கள் குடும்பத்தின் வறுமையையும் , அப்பாவின் கடமைகளையும், படிப்பின் முக்கியத்துவத்தையும் இரண்டுமணிநேரத்திற்கு எடுத்துச் சொன்னார். கவிதை எழுதுவதில் எனக்கு இருந்த ஈடுபாடு, என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். அப்பா வார்த்தைகளை அடுக்க அடுக்க என் கண்ணில் கண்ணீர்த்துளிகள் வருவதை உணர்ந்தேன். என் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். வறுமை தெரியாமல் என்னை அது வரை வளர்த்த என் பெற்றோரை நினைத்து பெரும் சோகமடைந்தேன். ஆனால் என்னால் கவிதையை விட முடியாது என்பதை உணர்ந்து கவிதையுடன் சேர்த்து படிப்பையும் கவனிக்கிறேன் என்று கூறினேன். ஆனால் அப்பாவோ கேட்பதுபோல் இல்லை. அழுதுகொண்டே அம்மாவிடம் சென்றேன். அம்மாவும் அதையே கூற, நெஞ்சம் உடைந்தது. ஓடோடி என் அக்காவிடம் சென்று கேட்டேன். அவளோ, நீ படிப்பை முடித்ததும் உன் கவிதை எழுதுவதை மறுபடியும் துவங்கலாம்..அது வரை படிப்பில் கவனம் செலுத்து என்று கூறினாள்.  பாதியில் இருந்த அந்த கவிதையை முடிக்காமல் காகிதத்தைக் கசக்கி எறிந்தேன். அருகில் இருந்த கணக்குப்புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினேன்.

இன்று நான் ஒரு பெரிய தொழில்நுட்பநிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராகுல் இன்று உலகம் போற்றும் எழுத்தாளர். அவனது முகப்புத்தகப் பக்கத்தை தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் பார்ப்பார்கள். நான் என் நண்பர்களுக்கு ஒரு சாதாரண ஆள். ஆனால் என்றும் என்னிடம் இருக்கும் மஞ்சள் நிற புத்தகம் அதை மறுக்கும். இன்று வரை நான் எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். அந்த நாளுக்கிப் பிறகு ஒரு வருடம் கவிதையை விட்டு அவதிப்பட்டேன். அதற்குப் பிறகு, என்றும் விடவில்லை. நமது கலையை எத்தனைப் பேர் படிக்கின்றார்கள் என்பது நோக்கம் அல்ல, கலையை என்றும் காதலித்துக்கொண்டு, விடாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன். என்றோ ஒரு நாள் என் கவிதைகளை கூறி மக்களை மகிழ்விப்பேன். அன்று நான் கவிஞனாக முழுமை அடைவேன். அந்த நாள் தொலைவில் இல்லை. இன்று தான் சென்னையிலேயே சமூக தலைப்புகளில் பேசவும், இலக்கியத்தை பகிரவும் இரு பெண்மணிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய முயற்சியைப்பற்றி முகநூலில் படித்தேன்.
என்னைப்போல், கலையை , வறுமை, குடும்ப சூழ்நிலை அல்ல வேறொரு காரணத்தினால் விட்டுவிட்டு அவதிப்படும் அனைவருக்காகவும் இது.

இப்படிக்கு,
நான் கவிஞன்.

5 thoughts on “நான் கவிஞன் – ஒரு சிறுகதை”

  1. காவிஞன் வாழ்வு என்றும் முற்றுப்புள்ளியை தோற்றுவித்து வாழும் என்பது இயற்கை நியதி. இதில் அதை கண்டேன்.

Comments are closed.

Scroll to Top