நொடிகளில் வாழ்வாயோ

இசைஞானியின் தென்றல் வந்து தீண்டும் பாடல் அந்த தெரு ஓரத்தில் இருந்த டீக்கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது.
பாடலுக்கேற்ப வண்ணங்களும், மனிதர்களும் அந்த தெருவை அலங்கரிக்க, கருமேகங்கள் நகரத்தை சூழ்ந்தன.
” ஐயோ மழை வரப் போகுது போலயே, துணி காய போட்டுருக்கேன்” என்று அந்த தள்ளு வண்டி பாட்டி பதறிக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப, எண்ணங்கள் அந்த தெருவில் ஆங்காங்கே தூவப்பட்டன. மழை, அது வரும் முன்னே தனது வேலையைத் துவங்கியது.
மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. எல்லோரும் வீட்டிற்கு புறப்பட ஆரம்பித்தார்கள். எத்தனையோ மக்கள் இருந்தும் , அந்த சமயத்தில் அழகாய் தெரிந்ததோ ஒரு தந்தை தனது மகனை பள்ளியில் இருந்து அவசர அவசரமாக அழைத்து வரும் காட்சி.
” எப்போ பாத்தாலும் விளையாட்டு. இப்போ பாரு மழை வர போது, நாம நனைய போறோம்” என்று தனது மகனிடம் கடிந்து கொண்டே வந்தார் அந்த தந்தை.
அதே நேரத்தில், அதே தெருவின் எதிர் திசையில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் , அவரது தாயாரும் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

” ஐயோ மழை வரப்போகுது . ஆட்டோல போலாம்னு பாத்தா அதிகமா கேக்கராங்க. “என்று வருந்திக்கொண்டே வந்தார் அந்த தாய்.

களைப்பான தினத்தின் வெளிப்பாடு நால்வர் முகத்திலும் தெரிந்தது.
காற்று பலமாக வீச, மேகங்கள் தனது இசையை வாசிக்க துவங்கியது. இடிச்சத்தம் அதிகரித்து செல்ல, இந்த இரு ஜோடிகளும் சந்திக்க ஆயிற்று. ஒருவரை ஒருவர் பார்த்தனர். சோர்ந்த முகங்களில் புது வருத்த நெடி தெரிய ஆரம்பித்தது. இரு ஜோடிகளும் அந்த ஒரு நொடியை மனதில் படியவைத்து , தாண்டி சென்றனர்.
சிறு தூரம் கடந்தபின் “நான் கருவில் இருந்தப்போ என் அம்மா கூட இப்டி தான் நடக்க கஷ்டப்பட்டுருப்பாங்களா ” என்று தனது மனதை அந்த கர்ப்பிணிப்பெண்ணின் மேல் வைத்து, தன் அப்பாவிடம் கேட்கிறான் அந்த சிறுவன். திகைத்துப் போன அந்த தந்தை, மகனின் கையை இறுக்கிப் பிடித்து, இறந்த தன் மனைவியை நினைத்து , அவள் கர்ப்பமாய் இருந்த காலத்தில் மலர்ந்த காதலை எண்ணி வருந்தி, மகனிடம் எதுவும் கூறாமல் நடந்து சென்றார்
இன்னொரு புறம், சோர்ந்து போன முகத்தைக் கண்டு, ” ஏன் மா சோகமா இருக்க?” என்று தனது மகளிடம் கேட்கிறாள் அந்த தாய்.
” அந்த பையனை பாத்தீங்களா? எவளோ சந்தோசமா அவன் அப்பாவோட போறான். என் குழந்த இதே மாதிரி அதோட அப்பாவோட இருக்க முடியுமா? என் வயித்துல இருக்கும் குழந்தை காகவாச்சும் என்ன விட்டு அவர் போகாம இருந்துர்க்கலாம்ல? ” என்று கூறி வருத்தத்துடன் கண்ணீர் விட்டால் அவள்.
” என்னமா செய்றது, நல்லவங்களை தான் அந்த இறைவன் சோதிக்கிறான். அழாத மா.. வா..” என்று கூறி கொண்டு, வெளிநாட்டில் வாழும் தனது மகனையும் பேரனையும் நினைத்துக்கொண்டே சென்றார் அந்த தாய்.
நால்வரின்  மனநிலையையும் , அதன் நிறத்தையும் அந்த மேகங்கள் பிரதிபலித்தன.

மழை பெய்ய துவங்கி சில மணி நேரத்தில் நின்றது. சூரியனும் நம்பிக்கை ஒளியை வீச துவங்கினார்.
இயற்கையும் , வாழ்க்கையும் கைகோர்த்து அந்த தெருவில் நடந்தனர்.
“திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பில
வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா “

2 thoughts on “நொடிகளில் வாழ்வாயோ”

  1. படிக்கும் போது மனம் கற்பனை வீதியில் கதையுடன் பயணிக்கிறது… அழகு..

Comments are closed.

Scroll to Top