Happy Madras Day

This is a writeup I wrote last year for Madras Day. 

 

“சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்களின் எண்ணிக்கை

 

மெரினாக் கடற்கரையின் தூரம்

 

கூவ ஆற்றுப் படுக்கையில் குடிசைகளின் எண்ணிக்கை.

 

தினம் நடக்கும் போராட்டங்களில் பங்குபெறும் மக்கள் எண்ணிக்கை

 

தினம் தினம் பேருந்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை….

 

என்று…. அனைத்தையும் அளந்து கூற முடியும்.

 

வெளியூர் சென்று ரயிலில் வரும் போது,  சென்ட்ரல் நிலையத்திற்கு முன்பு மெல்லிசை போல், கரைசேரும் படகு போல் அந்த ரயில் சென்றடையும் பொழுது வரும் அந்த உணர்வை வார்த்தைகள் கூற முடியாது, நெகிழ்ச்சியை அளந்து கூற முடியாது.

 

துன்பங்கள் ஆயிரம் தாக்கினாலும் பெசன்ட் நகர் கடற்கரையில் நண்பர்களுடன் சென்று போடும் அரட்டையில் வரும் சந்தோசம் எவ்வளவு என்று அங்கு அருகில் இருந்து அரட்டைகளை பார்த்து கொண்டிருக்கும் ஏழைச்சிறுவனின் சிரிப்பில் காண முடியும்.

 

எந்த ஊரில் பிறந்தால் என்ன எந்த ஊரில் வளர்ந்தால் என்ன தவிப்பது நம் சகோதர சகோதரிகள் என்று எண்ணி இயற்கை துன்புறுத்திய போதும், ஒன்றாய் நின்ற அந்த இரண்டு மாதக் காலத்தில் ஒவ்வொரு நொடிகளும் பொன்னொடிகள். காலத்தால் அழிக்க முடியாத அந்த ஒற்றுமையின் ஆழத்தை எண்ணி கூறமுடியுமா?

 

புதிதாக வரும் வெளிநாட்டு வீரர்களையும் பாசத்தால் நெகிழவைத்த “சென்னை சூப்பர் கிங்ஸ்” சட்டை அணிந்து, காலணி கூட அணியாமல் , சுட்டெரிக்கும் சூரியன்கீழ் மைதானங்களில் நண்பர்களுடன் மட்டைபந்து விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கங்களின் கர்வம் இந்த ஊர்

 

மீட்டர் போட மாட்டேன், போட்டால், மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா என்று சொல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கலாம். ஆனால் அதிலும் பாசத்துடன் , நேசத்துடன் பேசி பழகி வாழ்க்கையின் அங்கமாய் திகழும் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர்.

 

வாழ்க்கை எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை எண்ணி காலம் கழித்து இளையராஜா, ரஹ்மான் ஆகியாவரின் இசையில் அடைக்கலம் பெற்று பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து, வெளியே மாறிக்கொண்டிருக்கும் வெவ்வேறு சென்னையின் அடையாளங்களை வர்ணித்து கொண்டு செல்லும் அனைத்து நல்ல உள்ளங்களும் கர்வத்துடன், பாசத்துடன் சொல்லும் வரிகள், தான் ஒரு சென்னைவாசி என்று…

 

“நீ சொன்னதெல்லாம் பொதுவாகவே பெரும்பாலான ஊர்களில் உள்ளவை தானே” என்று நீங்கள் கேட்கலாம். அது தான் உண்மையும் கூட.

 

ஆனால், ஒரு மனிதன் தான் பிறந்து, வளர்ந்து, பழகி, சிரித்து, ஒவ்வொரு துன்பம் ,இன்பம் ஆகிய அனைத்தையும் பெற்று, பகிர்ந்து ,கற்று, தன் வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு, நினைக்க வைக்கும் அவனது ஊர் அவனுக்கு கோவில் ஆகிறது. எனது கோவில் மெட்ராஸ்.

 

பெற்றோர், நண்பர்கள், சகோதரர்கள் , சகோதரிகள் என எனக்கு பல தெய்வங்களை அளித்து கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை பெற்ற என் கோவிலுக்கு 378 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் <3

 

இப்படிக்கு, அ. பி. புவனேஷ் சந்தர்”

Happy Madras Day 🙂

Scroll to Top