கரையும் இடைவெளி
கனவு. மூன்றெழுத்து.ஆழமோ, வேறொரு உலகம் அறியும்.
காதல். மூன்றெழுத்து. ஆழமோ, அவள் கண்ணிமைகளில் நீ கட்ட நினைக்கும் முத்தக்கோட்டை அறியும்.
கனவும் நிறைவேறி , அது காதலியாய் மாறி அவ்வப்பொழுது நினைவூட்டும் அழகிய நினைவுகளில் ஒன்று .
அன்று திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தோம். ரயிலில் இருக்கும் இரண்டாவது அடுக்கில் தூங்கிக்கொண்டிருந்தேன் நான். ஆறடிக்கு தென்னைமரம் போல் வளர்ந்துவிட்டமையால் ரயில் பயணத்தில் வசதிக்கெல்லாம் இடம் இல்லை. திடீரென்று முழிப்பு வர, கண்ணை கசக்கிக்கொண்டே எழுந்தேன்.
“என்னடா? தூங்கு” என்றாள்
“இவளே எழுந்துட்டாளா?? விடிஞ்சிருச்சோ?” என்று எண்ணிக்கொண்டு எழுந்து பார்த்தேன். ஒரு கையில் சிப்ஸ் பொட்டலமும், மறுகையில் music playerம் வைத்து கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.
தீனிப்பண்டாரம்
எனக்கு கொடுக்காமல் அவளே சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“என்ன மொரப்பு? ச்சி, படு” என்றாள்
நானும் மறுபடியும் உறங்க சென்றேன். கண்ணை மூட, மனதில் ஓராயிரம் எண்ணங்கள்.
“இரவு நேரம், காதலி, யாருமில்ல” இது மட்டும் என் மனதில், அங்கு சம்பவிக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் காட்ட, எழுந்து அவளை உத்துப்பார்த்தேன். இசையில் மூழ்கிக் கிடந்தாள்.
“ஐயோ, நாமளே டூயட் பாடலாமே எரும”,என்று நினைத்துக்கொண்டு, கைக்கழுவும் இடத்திற்கு சென்றேன். முகத்தை நீரில் கழுவி , கண்ணாடியில் என் முகத்தை உத்துப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
“டேய் நீ மாதவன் டா மச்சான்” என்று புகழாரம் சூட்டிக்கொண்டு, என் தொலைபேசியை எடுத்து ஏதோ நொண்டி கொண்டிருந்தேன்.
திடீரென ஏதோ சத்தம் கேட்க, திரும்பி பார்த்தேன்.
கைக்கழுவும் இடத்திற்கு அருகில் இருந்த சுவரின் மீது சாய்ந்துகொண்டு கையில் இருந்த music player இல் ஏதோ நொண்டி கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சென்றேன்.
“என்னடி பண்ற? தூங்கல?” என்று கேட்டேன்.
என் முகத்தை கூடப் பார்க்காமல், ” போர் அடிக்குது டா” என்றாள்
இன்னும் அருகில் சென்றேன்.
அவளும் நான் நெருங்கியதை உணர்ந்தாள்.
“ஏய்” என்று கூப்பிட்டேன்.
“ஹம்ம்” என்றால்.
“எய்ய்ய்” என்றேன்.
எதுவும் கூறவில்லை. புரிந்துவிட்டது அவளுக்கு.
அவள் கன்னத்தை பிடித்து முகத்தை எழுப்பினேன். வெட்கமும் காதலும் அவள் முகத்தில் ஜொலிக்க,
நொடிகளை அவள் கண் இமைகளில் சேர்த்துவைத்தேன்.
“யாராச்சும் வராங்களா?” என்று கேட்டேன்.
எனக்கு பின் இருக்கும் பாதையை ஒரு நொடி பார்த்து,
“யாரோ இருக்காங்க…. ஆனா…” என்றால்.
இடைவெளிகள் கரைய, முத்தமிட சென்றேன்.
ஆனால் யாரோ வருவதைப் போல் இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல், திடீரென்று கைக்கழுவும் இடத்திற்கு தாவி, எதுவும் நடக்காததை போல் நின்றேன். ரயில் காதலுக்கு ஏற்ற இடம் என்றால், இரவில் பயணம் செய்பவர்கள் அதற்கு கிடைத்த அசுரர்கள்.
சில நொடிக்கு பிறகு, சிரித்துக்கொண்டே சென்று தூங்கச்சென்றாள்.
அன்று எங்கள் உதடுகள் சேரவில்லை. ஆனாலும் அந்த கண்கள்… இரு உயிர்கள் சேர அவர்களின் தோல்கள் தொடவேண்டுமோ?
நானும் சென்று என் தொலைபேசியை எடுத்து, இசையிடம் என் அனுபவத்தை கொண்டாட சென்றேன். “இதயம் இடம் மாறியதே, விழிகள் வழி மாறியதே” என்னும் பாடல்.
“மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உணக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ?
ஓ… மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் கொடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ?
புது யுகமே பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இரு துருவம் இணைந்ததோ இடைவெளிகள் தொலைந்ததோ
காலமென்னும் நதியில் விழுந்து
இரவும் நகர்ந்தது, பகலும் நகர்ந்தது, இதயமும் நகர்ந்ததுவோ”